ஓணம் பண்டிகை: தோவாளையில் பூக்களின் விலை இவ்வளவா?- பொதுமக்கள் அதிர்ச்சி
ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கேரள மக்களின் வசந்த விழா என்று அழைக்கப்படும் ஒணம் பண்டிகை. கடந்த 20ம் தேதி தொடங்கியது 10 நாள் விழாவில் இன்று நான்காவது நாள் ஓணத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் மலர் சந்தையில் பூக்களின் விற்பனை களை கட்ட துவங்கி உள்ளது.
கேரளாவில் வீடுகள் தோரும் அத்த பூ கோலம் போட்டு வருவதால் அங்கிருந்து கேரள வியாபாரிகளும், பொது மக்களும் பூக்களை வாங்கி செல்ல தோவாளை பூசந்தைக்கு அதிகமாக வருவதால் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் வரலட்சுமி நோன்பு நிகழ்ச்சி நாளை இருப்பதால் பூக்களின் தேவை மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் ஒரு கிலோ 350 ரூபாயில் இருந்த பிச்சி பூ இன்று 1250 ரூபாயாக விலை உயர்ந்து உள்ளது.
இதை போல் 550 ரூபாய் இருந்த மல்லிகை பூ 1000 ரூபாயாக உயர்ந்து உள்ளது. ஒரு தாமரை பூ 5 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதேப்போன்று கனகாம்பரம் 600 ரூபாயாகவும், செவ்வந்தி பூ 350 ரூபாயாகவும், ரோஜா பூ 300 ரூபாயாகவும் விலை உயர்ந்து உள்ளது.
வரும் நாட்களில் பூக்களின் விலை பல மடங்கு உயரும் என தோவாளை பூ வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.