பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரிப்பு- கண்காணிக்க மயிலாடுதுறை எஸ்.பி உத்தரவு

வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல்கள் கொடுத்து அவர்களை தவறாமல் வகுப்புகளுக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்
மயிலாடுதுறை எஸ்.பி மீனா
மயிலாடுதுறை எஸ்.பி மீனா

பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் வெளியில் சுற்றும் மாணவர்கள் கண்காணிக்கப்படுவர் மயிலாடுதுறை எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை நகரில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிலர் பள்ளி வகுப்புகளை புறக்கணித்து பூங்காக்களில் சுற்றித்திரிந்து வருவது வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் பள்ளிச்சீருடையுடன் அதிக அளவில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சுற்றித்திரிந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அருகே உள்ள தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பூங்காவிற்கு சென்று அங்கிருந்த மாணவர்களை பிடித்துள்ளனர்.அவர்களோ ஆசிரியர்களை பார்த்தும் கூட ஓடாமல் அமைதியாக இருந்துள்ளனர்.அவர்களில் சிலர் இயல்பு நிலைக்கு மாறாக இருந்தது தெரியவந்து ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்து அதிர்ச்சியின் உச்சிக்கு சென்றுள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை எஸ்.பி மீனா நாராயணசாமி, நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது இந்த பள்ளி மட்டுமல்லாது வைத்தீஸ்வரன்கோவில், மங்கைநல்லூர், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தினமும் பூங்காவிற்கு வந்து கஞ்சா புகைக்கும் பழக்கத்தை தொடங்கி பலர் அதற்கு அடிமையாகவும் ஆகிவிட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக எஸ்.பி மீனா, “மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்கிறார்களா? என்று ஆசிரியர்கள் தினந்தோறும் கண்காணிக்க வேண்டும். அப்படி வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல்கள் கொடுத்து அவர்களை தவறாமல் வகுப்புகளுக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்” எனவும் ஆலோசனை வழங்கினார். பள்ளி தரப்பிலும் ‘தினந்தோறும் போலீசார் ரோந்து பணிக்கு வந்தால் மாணவர்கள் பள்ளிகளை புறக்கணிக்காமல் வருவார்கள். அதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து எஸ்.பி மீனா, “மயிலாடுதுறை நகர பகுதிகளில் பள்ளி கல்லூரி நேரங்களில் சீருடையுடன் வெளியில் சுற்றித்திரியும் மாணவர்கள் காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்படுவர். அப்படி வெளியில் திரியும் அவர்களுக்கு அறிவுரை கூறி பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அதேசமயம் போதை குறித்த விழிப்புணர்வும் அவர்களுக்கு ஏற்படுத்தப்படும்.மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை குறித்து கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.” என்றார்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com