வரவு, செலவு கணக்குகள்: பேனர் வைத்த ஊராட்சி மன்றத் தலைவி- பாராட்டி மகிழ்ந்த கிராம மக்கள்

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற வரவு, செலவு கணக்குகளை ஊர் முழுவதும் பேனர் வைத்து தெரியப்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவிக்கு குவியும் பாராட்டுக்கள்.
ஊர் முழுவதும் வைக்கப்பட்ட பேனர்
ஊர் முழுவதும் வைக்கப்பட்ட பேனர்

இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபா கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே செம்பதனிருப்பு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற மற்ற ஊராட்சிகளான சோழம்பேட்டை, கங்கனபுத்தூர், பொன்னூர், பாண்டூர், திருமங்கலம், திருவேள்விக்குடி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சிக்கு வரப்பெற்ற நிதி எவ்வளவு, அதில் என்னென்ன பணிகள், எவ்வளவு நிதியில் செய்யப்பட்டுள்ளன? யார், யாருக்கு ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது? மீதி இருக்கும் நிதி எவ்வளவு? உள்ளிட்ட வரவு, செலவு கணக்குகளும் பார்க்கப்பட்டது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மக்களும் கேள்வி எழுப்பி கணக்கு கேட்டதில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவி செந்தமிழ்செல்வி
ஊராட்சி மன்றத் தலைவி செந்தமிழ்செல்வி

இந்நிலையில் சோழம்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவி செந்தமிழ்செல்வி ராமமூர்த்தி வரவு செலவு கணக்குகளை பட்டியலிட்டு கிராம மக்கள் யாரும் கேள்வி கேட்காத வகையில் ஊராட்சிக்கு வந்த நிதி, அதில் செய்யப்பட்ட பணிகள், செலவிட்ட தொகை, மீதம் இருக்கும் நிதி ஆகியவை குறித்த விவரங்களை ஒளிவுமறைவின்றி பேனராக அச்சிட்டு ஊர் முழுவதும் சுதந்திரதினத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே வைத்துள்ளார்.

இதில் சந்தேகம் இருந்தாலும் மக்கள் கிராம சபா கூட்டத்தில் கேள்வி எழுப்பலாம் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அவரது பேனரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாத அளவில் விவரமாக இருந்ததால் கிராமசபா கூட்டம் எந்தவித பரபரப்பும் இன்றி முடிந்துள்ளது. இது குறித்து பொதுமக்களும் தங்கள் ஊராட்சிமன்ற தலைவியை பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக மாப்படுகை ஊராட்சிமன்ற தலைவி செந்தமிழ்செல்வி ராமமூர்த்தியிடம் பேசினோம். அவர் பேசியதாவது, "ஊராட்சிக்கு தரப்படும் நிதி என்பது மக்களுடைய பணம் தான். அவர்களுடைய பணத்தில் அவர்களுக்கான பணிகளை தரமாக செய்து தருவது தான் ஊராட்சி மன்ற தலைவர்களின் வேலை. அதைத்தான் நான் செய்தேன்.

அதேபோல் ஊராட்சி நிதியில் ஒரு பைசா கூட முறைகேடு இல்லாமல் அனைத்து பணிகளும் செய்யப்பட்டிருக்கிறது. வீட்டு வரி வசூல் உள்ளிட்ட வரவுகளோடு, மாநில நிதிக்குழு தொகை என அனைத்து வரவுகளையும் குறிப்பிட்டு, அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது, மீதம் இருப்பு எவ்வளவு? என அனைத்து விவரங்களையும் மக்கள் முன் எந்த ஒளிவுமறைவுமின்றி வைத்துவிட்டேன். இந்த பேனர் இன்னும் ஒரு மாதம் வரை இருக்கும். அதுவரை இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் என்னிடம் கேட்கலாம். இதேபோல் தொடர்ந்து நேர்மையுடன் பணி செய்வேன்" என்று கூறினார்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com