சிறப்பு அதிகாரி நியமனம்: தலைமைச் செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

அவகாசத்துக்குள் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண கோரிக்கைகளை பெற்று முடிவெடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க செப்டம்பர் 26ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் அண்டு வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய எஸ்.ராமசாமிக்கு வழங்க வேண்டிய சம்பளம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாயை  2 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து 2012ஆம் ஆண்டு தலைமை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அமர்வு,  அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பாக அரசாண வெளியிட்டது குறித்து ஆகஸ்ட் 28ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிறப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பாக கொள்கை முடிவெடுத்து, விதிகளை வகுக்க வேண்டியுள்ளதால், மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கக் கோரி பொதுத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறி, அந்த கடிதம் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் கட்டண பாக்கியை வழங்கக் கோரி வழக்குகள் தாக்கல் செய்வதை தவிர்க்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை கூறி, தலைமைச் செயலாளருக்கு, அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம் எழுதியும், அதை அமல்படுத்த அரசு முன்வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம், தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், பொதுத்துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தில், நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படும் என்றோ, பரிசீலிக்கப்படும் என்றோ குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பொதுத்துறை செயலாளர் கோரிக்கையை ஏற்று ஒரு மாத கால  அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்த அவகாசத்துக்குள் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து, செப்டம்பர் 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும், தவறினால், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com