தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கிருந்து அகமலை செல்லும் வழியில் வள்ளுவன்தொழு என்ற இடத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ்டோங்கிரே போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போதை ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது. உடனே அங்கிருந்த 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து, போடி தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி போடிநாயக்கனூர் அருகே உள்ள விசுவாசபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த கருப்பையா (56) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில்தான் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களும் தங்களது எல்லைப் பகுதிகளில் போலி மது, கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா? என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட உயிரிழப்பு சம்பவங்களின் சோகமே இன்னும் மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில் மீண்டும் கள்ளச்சாராயம் பிடிபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.