ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறிய சிறிய தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலமாகவே தண்ணீர் விற்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீர் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
மழைநீர் சேகரிப்பு வாயிலாக எவ்வளவு நீர் கிடைக்கும், நிலத்தடி நீர் எவ்வளவு எடுக்கப்படும், கழிவுநீர் எவ்வளவு உற்பத்தியாகும் போன்றவை துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் சிறிய சிறிய தொழிற்சாலைகள் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதில்லை.
ஸ்ரீபெரும்புதூரில் சுற்றியுள்ள சந்த வேலூர், எச்சூர், காட்ரம்பாக்கம், ஏரிகளிலிருந்து மோட்டார் மூலம் எடுக்கப்படும் நீரானது லாரியில் நிரப்பி 2500 ரூபாய் முதல் 3000 வரை பகுதிகளுக்கு ஏற்றவாறு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இது போன்று தொடர்ச்சியாக லாரிகள் மூலம் தண்ணீர் திருடப்படுவதால் விரைவில் ஏறி தண்ணீர் இன்றி வரண்டு போகும் சூழல் உள்ளது.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி இன்றி ஏரிகளில் இருந்து நீர் எடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.