ரவுடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என தென் மாவட்ட போலீஸ் எஸ்.பி-களுக்கு தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
"தமிழகத்தில் கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. இதனால் பள்ளி மாணவர்களும் போதைக்கு அடிமையாகி விடுகிறார்கள். இளம் குற்றவாளிகள் அதிகரித்து வருகிறார்கள். பெரும்பாலான கொலை சம்பவங்களுக்கு கஞ்சா போது காரணமாக இருக்கிறது" தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுகள் இது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கஞ்சா போதையால் நடந்தேறிய கொலைகள் அதிகம்.
தென் மண்டல ஐஜியாக பொறுப்பேற்ற அஸ்ரா கார்க் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். கஞ்சா வியாபாரிகளை பிடித்து வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிட்டால் மட்டும் போதாது. அவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி பல கஞ்சா வியாபாரிகள் சொத்துக்களை இழந்தனர். ஆனாலும் கஞ்சா வியாபாரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக விசிட் அடித்தார் ஐ ஜி. ஒவ்வொரு மாவட்ட எஸ்பிகளையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கூட்டம் நடந்தது.
இது பற்றி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். " இந்த வருடம் இதுவரை மட்டும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் 169 பேர் கொண்ட தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நான்கு மாவட்டங்களிலும் 2,256 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. முக்கிய தாதாக்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று ஐஜி விரும்புகிறார். அதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சுணக்கமாக செயல்படும் போலீஸ் அதிகாரி மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்காகவே அவர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தி வருகிறார்" என்றார்கள்.
-அண்ணாதுரை