50 லட்சம் கொடுத்தால் மறுநாளே பேராசிரியர் வேலை ரெடி என்று தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல ஊழியர் ஒருவர் பேசும் ஆடியோ கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி நாசர் சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் கீழ் ஏராளமான பள்ளி கல்லூரிகள் இருக்கின்றன.இவற்றில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி அவ்வப்போது நடப்பது வழக்கம். திருமண்டல நிர்வாகிகள் பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் செய்கிறார்கள் என்பது திருமண்டல மக்களின் தொடர் குற்றச்சாட்டு. அதை திருமண்டல நிர்வாகிகள் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் திருமண்டல நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஒரு பள்ளியில் ஊழியராக பணிபுரியும் சாமுவேல் சத்தியசீலன் என்பவர் ஒரு பெண்ணிடம் பணம் கேட்டு பேசும் ஆடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அந்த பெண்ணிடம் பேசும் சாமுவேல் சத்தியசீலன், "நான் தற்பொழுது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருக்கிறேன்.இங்கு ஒரு அண்ணாச்சி எனக்கு பழக்கம். தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நாசரேத் மர்காசிஸ் கல்லூரியில் பேராசிரியர் பணியிடம் நிரப்பப்பட இருக்கிறது.அதற்கு நீங்கள் விண்ணப்பம் செய்திருக்கிறீர்கள்.
நீங்கள் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் உடனே பேராசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்று அவர் சொல்கிறார் நீங்கள் பணம் கொடுக்க தயாரா?" என்று கேட்கிறார்.
அதற்கு அந்தப் பெண் "ஏற்கனவே திருமண்டல நிர்வாகத்திற்கு பணம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. அதற்கு மேல் பல்கலைக்கழகத்திற்கு பணம் கொடுக்க வேண்டுமா? எங்கள் வீட்டில் அவ்வளவு பணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே வீட்டில் கேட்டு சொல்கிறேன்" என்று சொல்கிறார் அந்தப் பெண்.
அவர்கள் இருவரும் பேசும் இந்த ஆடியோ தான் வெளியாகி திருமண்டல கிறிஸ்தவ மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்திற்கு எதிரான அணியைச் சேர்ந்தவர்கள், "அவன் ஒரு பிராடு. திருமண்டலத்தின் பெயரையும் பல்கலைக்கழகத்தின் பெயரையும் சொல்லி பணம் பறிக்க பார்க்கிறான். அவனிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். மேலும், பணி நியமனத்திற்கு திருமண்டல நிர்வாகிகள் பணம் வாங்குவது திருமண்டலத்தை அடகு வைக்கும் செயல். இதை நான் கடுமையாக கண்டிக்க வேண்டும்" என்று சொல்லி வருகிறார்கள்.