2023-24 கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82 உயர்த்தி ரூ.2,265 எனவும், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107 உயர்த்தி ரூ.2310 எனவும் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில் ”தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற நெல்லுக்கான ஊக்கத்தொகை ஏற்புடையது இல்லை. மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையை போன்று மாநில அரசின் விலை அறிவிப்பும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது” என்றபடி விவசாயிகள் புகார் தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து தமிழநாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தர விமலநாதனிடம் பேசினோம்.
"தேர்தல் காலத்தில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500 தருவோம் என அறிவித்த வாக்குறுதி கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத நிலையில் இந்தாண்டாவது நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2500 அறிவிக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். குவின்டால் ஒன்றுக்கு சென்றாண்டை விட 7 ரூபாய் மட்டுமே உயர்த்தி இருப்பது நியாயமற்றது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நிகழாண்டில் தமிழ்நாட்டில் சுமார் 43 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் ஆகியுள்ள நிலையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500 விலை அறிவித்தால் தமிழ்நாடு அரசுக்கு ஆகின்ற கூடுதல் நிதிச்செலவு ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூபாய் 720 கோடி மட்டுமே.
மத்திய அரசும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றி வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம் என்று வாக்குறுதி தந்து விட்டு மத்திய அரசும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசும் நெல் உற்பத்தியாளர்களை ஏமாற்றி உள்ளது.
மத்திய அரசும் மாநில அரசும் நெல்லிற்கு இந்தாண்டு அறிவித்திருக்கின்ற குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் ஊக்க தொகைகள் நியாயமற்றதாக உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், அந்த மாநில நெல் உற்பத்தியாளர்கள் நலன் கருதி குவிண்டால் ஒன்றிற்கு 2640 ரூபாய் வழங்குகிறது. அதனால் அந்த மாநிலத்தில் நெல் உற்பத்தி ஒரு கோடியே 12 லட்சம் மெட்ரிக் டன் உயர்ந்திருக்கிறது.
கேரள மாநிலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2800 வழங்கி வருகின்ற நிலையில் அம்மாநிலங்களில் உற்பத்தி செலவினங்கள் எவ்வளவு உள்ளது அதே அளவிற்கு தமிழ்நாட்டிலும் உற்பத்தி செலவுகள் ஒரே அளவாக உள்ள பொழுது இந்த நெல்லிற்கான ஊக்கத்தொகை விலை அறிவிப்பு போதுமானதல்ல.
தமிழ்நாடு அரசிற்கு நிதிச் சுமை நிதி பற்றாக்குறை இருக்குமேயானால் டாஸ்மாக் மதுபானங்களில் பாட்டில் ஒன்றிற்கு இரண்டு ரூபாய் மட்டும் உயர்த்தி அதில் கிடைக்கின்ற நிதியை நெல் உற்பத்தியாளர்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000 என வழங்கலாம். இதனை அரசு கருத்தில் கொண்டு நெல்லிற்கான விலை அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.
- ஆர்.விவேக் ஆனந்தன்.