கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், "அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் சொன்னார். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று கூறுகிறார் அது எந்த வாய்? இது எந்த வாய்?
இன்றைக்கு 28 மாத திமுக ஆட்சியில் 150 சதவிகித சொத்து வரி உயர்ந்து விட்டது, மின் கட்டணம் உயர்ந்து விட்டது, பால் விலை உயர்ந்து விட்டது, நெய் விலை எட்டு முறை உயர்ந்து விட்டது, வேட்டி முதல் காலனி வரை உள்ள அனைத்து பொருள்களும் 40% விலைவாசி உயர்ந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை காட்டிய உதயநிதி அந்த செங்கல் கொண்டு வந்து மீண்டும் அடிக்கல் நாட்டுவாரா?
அதே போல் இந்த செக்கானூரணி பகுதியில் பாரம்பரிய முறைப்படி இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது ஆனால் மக்கள் எதிர்ப்பை மீறி மின் மயானத்தை கொண்டு வருகிறார்கள். இந்த திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற மக்கள் பிரச்னையில் எதிர்க்கட்சி தொகுதிகளை புறக்கணித்தால் மக்களின் பிரச்னைக்காக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். மக்களுக்காக தான் பதவி பதவிக்காக மக்கள் அல்ல.
சனாதானத்தை பற்றி பேசும் உதயநிதி காவிரி பிரச்னைக்கு கடுமையான கண்டன அறிக்கை விட திராணி உள்ளதா? ஏனென்றால் கூட்டணி உடைந்து விடும் என்ற பயம். கூட்டணித் தலைவர் யார், பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னாலே அந்த கூட்டணி சுக்கு நூறாக உடைந்து விடும். இன்றைக்கு தலை இல்லா முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது" என்று பேசியுள்ளார்.