'மகள் சென்ற இடத்துக்கே நானும் செல்கிறேன்' - ஒரே தேதியில் விபரீத முடிவெடுத்த தந்தை

தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள் என உருக்கமான பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தற்கொலை செய்துக்கொண்ட தந்தை, மகள்
தற்கொலை செய்துக்கொண்ட தந்தை, மகள்

கன்னியாகுமரி அருகே மகள் இறந்த அதே தேதியில் துக்கம் தாளாமல் தந்தை தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பறையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆன்றணி அமல்ராஜ் (40). தச்சு தொழிலாளியான இவர் நேற்று மாலை வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் போலீசார் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது சடலத்தை மீட்டு அவரது மனைவி சத்தியகலாவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆன்றணி அமல்ராஜ் சத்தியகலா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டு மகள்களுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த 9-ம் வகுப்பு படிக்கும் இளைய மகள் ஸ்ரீலட்சுமி வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அன்று முதல் மன வேதனையில் இருந்து வந்த ஆன்றணி அமல்ராஜ் குடிபோதையில் தன்னிடம் தகராறில் ஈடுபடுவதோடு மகள் சென்ற இடத்திற்கே தானும் சென்று விடுவேன் என்று கூறி வந்துள்ளார்.

தொடர்ந்து கணவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் சத்தியகலா ஒரு வாரத்திற்கு முன் கணவரிடம் கோபித்து கொண்டு மூத்த மகளுடன் குளச்சலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நேற்று மாலை வீட்டில் இருந்த ஆன்றணி அமல்ராஜ், எனது மகள் சென்ற இடத்திற்கே செல்கிறேன் எனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை, எனது உடல் உறுப்புக்களை யாருக்காவது தேவைப்பட்டால் தானம் செய்யுங்கள் என உருக்கமாக பேசி வீடியோ பதிவு செய்து தனக்கு வாட்ஸ் ஆப்-ல் அனுப்பி வைத்ததாகவும், அதன் பின் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்த போது ஆன்றணி அமல்ராஜ் வீட்டில் அறையில் உள்ள மின் விசிறியில் போர்வையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய இரணியல் போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, மனைவி சத்தியகலா கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்ததோடு இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆன்றணி அமல்ராஜ் மனைவிக்கு அனுப்பிய வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள் தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதம் கழித்து அதே தேதியில் துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு:

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மைய எண்: 104

சினேகா தொண்டு நிறுவனம்:

எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.

தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com