வாலாஜாபாத் அருகே மதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு போலீசில் கணவர் சரணடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தைகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கல்தச்சர் பணி செய்து வரும் ஸ்ரீதர் மது போதைக்கு அடிமையான நிலையில், சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் மதுபானம் குடிக்க செலவழித்து விட்டு வரும் நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவும் ஸ்ரீதர் மது குடித்துவிட்டு அதிக போதையில் வீட்டிற்கு வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அதிக கோபத்துடன் இருந்த ஸ்ரீதர் அதிகாலை நேரத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலை மீது வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்.
மனைவியை கொலை செய்து விட்டு வெளியே சென்று விட்ட ஸ்ரீதர், மதுபோதை தெளிந்த நிலையில் மனம் வருந்தி மனைவியை கொலை செய்தது குறித்து அவசர எண் 100க்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாரிடம் ஸ்ரீதர் சரணடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ஸ்ரீதரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையினால் தாயை கொலை செய்து விட்டு தந்தை சிறைக்குச் செல்லும் நிலையில் ஏதும் அறியாத மூன்று குழந்தைகள் செய்வதறியாமல் அனாதைகளாக மாறி உள்ள சம்பவம் சங்கராபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.