கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சர்ச்சையாகப் பேசியதால் கூட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மே-1 தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பி.கொல்லப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் கூட்டத்தில் மக்கள் பங்கேற்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி தென்னவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிராம மக்கள் வரவு- செலவு கணக்குகளைக் கேட்டனர். அடுத்து கோடைக் காலம் என்பதால் ஒகேனக்கலில் இருந்து வரும் குடிநீர் போதிய அளவு வருவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தலைவரின் உறவினர்களுக்கு மட்டும் மத்திய ஜல்சக்தி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் ரெட்டியூர், காவாக்கரை உள்ளிட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வசதி இல்லை. இதனால், நீண்ட தூரம் சென்று குடி நீர் எடுத்து வருவதாகவும், ஊராட்சி மன்றத் தலைவர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாகவும் கிராமப் பெண்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர், ‘’இதுகுறித்து எங்கு வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கே சென்றாலும் என்னிடம்தான் வரவேண்டும்’’எனக் கூறியதால் கிராம மக்கள் கூட்டத்தை விட்டுக் கலைந்து சென்றனர். 100-க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.