தென்காசி அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு துப்பு துலங்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி தப்பிச்சென்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பக்கம் வடக்கு அழகுநாச்சியார்புரம் கிராமத்தில் ஊருக்கு அவுட்டரில் உள்ள ஒரு பூந்தோட்டத்தில் ஒரு பெண் உடல் கிடந்தது. உடல் மீது ஒட்டுத்துணி கூட இல்லை, அவரது உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்திருந்தது. அடையாளம் தெரியாமல் இருக்க முகம் கொடூரமாய்ச் சிதைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாய்ச் சென்ற சிலர் இது குறித்து திருவேங்கடம் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.
இதனைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மோப்ப நாய் சகிதம் அங்கு வந்தார்.ஆனால், மோப்ப நாயால் மோப்பம் பிடிக்க முடியவில்லை. பெண்ணின் உடலைச் சுற்றி மிளகாய்ப்பொடி தூவியிருந்ததே இதற்கு காரணம். எனவே மோப்ப நாயை அனுப்பி விட்டு விசாரணையைத் தொடங்கியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் சக்திவேல்.
இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.அவர் கூறுகையில், ”கொலையுண்டு கிடந்த பெண்ணின் பெயர் கனகாதேவி 32 வயது. அவரது கணவர் பெயர் மகாகிருஷ்ணன் 40 வயது. இவர்களுக்கு முத்துலட்சுமி என்கிற மகளும், கவின் என்ற மகளும் இருக்கிறார்கள். மகாகிருஷ்ணனுக்கு இதே ஊரைச் சேர்ந்த விதவைப்பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதைக் கனகாதேவி கண்டித்தாலும் கூட மகாகிருஷ்ணன் கள்ளத்தொடர்பை விடுவதாய் இல்லை. இதனால் டென்சனான கனகாதேவி தன் கணவருடன் பேசுவதில்லை.
இந்த நிலையில் மகாகிருஷ்ணனின் காதலியின் குடும்பத்தினர் அவர மீது போலீசில் புகார் செய்திருக்கிறார்கள். இதனால் அவரை அழைத்துப்பேசிய போலீஸ் கள்ளத்தொடர்பை முறித்துக்கொள் என்று அட்வைஸ் செய்து அனுப்பியிருக்கிறார்கள். இந்த விஷயம் கனகாதேவிக்குத் தெரியவர, கணவர் மகாகிருஷ்ணனுடன் சண்டை போட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகாகிருஷ்ணன் மனைவியைக்கொன்று பூந்தோட்டத்தில் போட்டு விட்டு, துப்புத் துலங்காமலிருக்க உடலைச் சுற்றி மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க போலீஸ் மதுரை விரைந்துள்ளது” என்றார்.