கள்ளக்காதல் விவகாரம்: மதுக்கொடுத்து கணவர் வெட்டிக்கொலை- அதிர்ச்சி பின்னணி

திருவெறும்பூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலன் காதலியின் கணவனை வீட்டிலேயே வெட்டிச்சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கொலை செய்யப்பட்ட சரவணன்
கொலை செய்யப்பட்ட சரவணன்

திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சரவணன் பெயிண்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சவுந்தரவள்ளி என்ற மனைவியும், ஆஷாசர்மிலி, சுவாதி, ஹரிணி என்ற மூன்று மகள்களும் உள்ளனர். இதில் ஆஷாசர்மிலி, சுவாதி ஆகியோர் சென்னையில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். 3-வது மகள் ஹரிணி திருவெறும்பூரில் உள்ள ஐடியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், சவுந்தரவள்ளி தனது மகள் ஹரிணியை அழைத்து கொண்டு சென்னையில் உள்ள மகள்களை பார்ப்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை சென்றுள்ளார். சரவணன் மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்ததால் அவ்வப்போது வீட்டிலேயே மது அருந்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில், சரவணன் மனைவி சவுந்தரவள்ளிக்கு திருவெறும்பூரை அடுத்துள்ள எழில்நகர் பகுதியில் உள்ள ஒரு பந்தல் போடும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பருடன் நீண்ட நாட்களாக நெருக்கம் இருந்துள்ளது.

சவுந்தரவள்ளிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே இருந்த நெருக்கம், காதலாக உருவெடுத்து தனித்து வாழும் நிலைக்கு சென்றிருக்கிறது.இதனை அறிந்த சரவணன் தனது மனைவியை தட்டிக்கேட்டிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சவுந்தரவள்ளி தனது மகள் வீட்டிற்கு சென்னைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், நேற்று இரவு சவுந்தரவள்ளியின் கள்ளக்காதலன் ராதாகிருஷ்ணன், குமரேசபுரத்தில் இருக்கும் சரவணன் வீட்டிற்கு வந்து சரவணனுக்கும் மது வாங்கிக்கொடுத்து இருவரும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசியும், சண்டையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

அதன் பின்னர், சவுந்தரவள்ளிக்கு போன் செய்த ராதாகிருஷ்ணன், 'நமக்கு இடஞ்சலா இருந்த உன் புருஷன போட்டு தள்ளிட்டேன் " எனக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சவுந்தரவள்ளி பந்தல் காண்ட்ராக்டர் பால்ராஜ் என்பவருக்கு தகவல் சொல்லி பார்க்கும்படி கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து பால்ராஜ் பார்த்தபோது சரவணன் ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், பந்தல் காண்ட்ராக்டர் கொடுத்த தகவலின் அடிப்படையில், திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com