திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சோபனாபரம் காட்டுகொட்டகை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி சாரதா (19).
தம்பதி இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ராஜ்குமார் வைக்கோல் திரிக்கும் மெஷின் வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.
மேலும், சோபனாபுரம் விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தம்பதி இருவரும் விவசாயம் செய்து வந்ததால் அங்கு வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் வரையிலும் இவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டுக்குள் கணவன், மனைவி இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே சமயம் வீட்டில் இருந்த நகைகளோ, பணமோ திருடு போகவில்லை. இதையடுத்து இச்சம்பவம் பற்றி பொதுமக்கள் உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து உப்பிலியபுரம் காவல் நிலைய போலீசார், முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர் பகுதியில் நடந்த இந்த இரட்டை கொலை பற்றி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று காதல் திருமணம் செய்தது காரணமா? தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது முன்விரோதத்தில் ஏற்பட்ட கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
- திருச்சி ஷானு