நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்திருக்கிறது. யானை, புலிகள், ராஜநாகம், சிறுத்தை, மான்கள், சிங்கவால் குரங்குகள் என எண்ணற்ற வன உயிரினங்கள் அங்கு வசிக்கின்றன. இவைகளை வேட்டையாட பல வேட்டைக்காரகளும் இருக்கிறார்கள். அவர்களை வனத்துறையினர் இரும்புக் கரம் கொண்டு அடக்கினாலும் கூட புற்றீசல்கள் போல் பெருகி வருகிறார்கள் வேட்டைக்காரர்கள்.
கடந்த 2ம் தேதி புலிகள் காப்பக இணை இயக்குநர் ரமேஷ்வரன் தலைமையிலான வனத்துறையினர் புலிகள் காப்பகத்தில் உள்ள பரிவரி சூரியன் ஃபீட்டில் ரோந்து சுற்றி வந்து கொண்டிருந்தபோது, கையில் பைகளுடன் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிந்தார்கள். அவர்களைப் பிடித்து வனத்துறையினர் விசாரித்தபோது, ஒருவர் பெயர் சதீஷ் 43 வயது, இன்னொருவர் பெயர் ராகுல், 23 வயது, நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது மூன்று நாட்டு வெடிகுண்டுகள் அதில் இருந்தன. இதைப் பார்த்து திடுக்கிட்டுப்போன வனத்துறை அதிகாரிகள் அவர்களை தீவிரமாய் விசாரித்ததில் அவர்கள் இருவரும் வேட்டைக்காரர்கள். மான், காட்டுப்பன்றி போன்றவற்றை வெடிகுண்டு வீசி கொன்று அதன் இறைச்சியை விற்பவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்களுக்கு பின்னணியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரும் இருப்பதை தெரிந்து கொண்ட வனத்துறை அவர்கள் இருவரையும் ரிமாண்ட் செய்தனர்.
பின்னணியில் இருக்கும் வி.ஐ.பிக்களைப் பிடிக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது குறித்து புலிகள் காப்பக இணை இயக்குநர் ராமேஷ்வரன் கூறுகையில், ‘‘வனவிலங்குகளை வேட்டையாடுவது கடுமையான குற்றம். அவர்கள் யாராக இருந்தாலும் எங்களிடம் தப்ப முடியாது’’ என்றார்.