கன்னியாகுமரி மேற்கு கடற்கரை மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் வழக்கமாகவே ஆனி, ஆடி மாதங்களில் கடற்சீற்றம் ஏற்படும். இவ்வாறு கடற்சீற்றம் ஏற்படும்போது கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகள் மணல் அரிப்பு ஏற்பட்டு கடலுக்குள் இழுத்து செல்லப்படுவது வழக்கமாக உள்ளது.
இதனைத்தடுக்க தமிழக மற்றும் கேரள அரசுகள் கடற்கரை பகுதிகளில் பெரிய அளவிலான பாறை கற்களை கொண்டு கடல் அலை தடுப்பு சுவர் அமைத்து பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில் கேரளா-தமிழ்நாடு எல்லை கடலோர பகுதியான பொழியூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டு வந்ததோடு கரையோரம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவர்களை அலை கடலுக்குள் இழுத்துச்சென்றது.
மேலும் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்து 10க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அதோடு மட்டுமின்றி வீடுகளில் கடல்நீர் புகுந்து முழுவதுமாக மணல் திட்டுகளாக மாறி உள்ளன.
மேலும் இந்த கடல்சீற்றம் காரணமாக குமரி-கேரளாவை இணைக்கும் கடற்கரை சாலை மணல் அரிப்பு ஏற்பட்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கேரள பகுதிக்கும், கேரளாவில் உள்ள மீனவர்கள் குமரி மாவட்டத்திற்கும் வந்து செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து கடல் சீற்றத்தில் இருந்து மீதம் இருக்கும் சாலையை பாதுகாக்கும் வகையில் அப்பகுதி மீனவர்கள் சாக்குமூட்டைகளில் மணலை நிரப்பி தடுப்புகள் அமைத்துள்ளனர்.
அப்படி இருந்தும் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கடல் அலை ஆளுயுரத்திற்கு மேலெழும்பி வருகிறது. இதனால் தொடர்ந்து மணல் அரிப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் இடிந்து விழும் அபாயம் நிலையில் உள்ளது.
எனவே விபத்துகள் ஏற்படாமல் இருக்க மீனவர்கள் சாலையின் எல்லைப் பகுதிகளில் கயிறுகள் கட்டி, தடுப்புகள் அமைத்து உள்ளனர். மேலும் கடல்சீற்றத்தின் காரணமாக பொழியூர் பகுதியில் நின்றிருந்த ஏராளமான மின்கம்பங்கள் உடைந்தும், சரிந்து விழுந்தும் சேதம் அடைந்துள்ளன.
இதனால் இப்பகுதிகளில் கடந்த 3 தினங்களுக்கு மேலாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பொழியூர் பகுதியில் உள்ள சாலை துண்டிக்கப்பட்டதைப் போல கடந்த 10 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கடல்சீற்றத்தின்போது குமரி மாவட்ட மீனவ கிராமங்களை இணைக்கும் எடப்பாடு சாலை துண்டிக்கப்பட்டது.
10 ஆண்டுகளை கடந்தும் இதுவரையிலும் அந்த சாலை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேப்போல் தற்போது உடைபட்டுள்ள சாலையையும் கேரள அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.