நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியை அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜேஷ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் அவரது மனைவி செல்வி 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். ராஜேஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார், அப்போது அவரது வீடு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
உடனே 100 நாள் வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர். வீட்டின் உள்ளே இருந்த ராஜேஷூக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. உடனே ராஜேசை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதையடுத்து சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே மாற்றுத்திறனாளி ராஜேஷை முன்விரோதம் காரணமாக எதிரிகள் கட்டிலில் கட்டிப் போட்டு வீட்டிற்கு தீ வைத்துவிட்டனர் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். கீழையூர் போலீசாரிடம் பேசினோம். "ராஜேஷை கட்டிலில் கட்டி போட்டு குடிசைக்கு தீ வைத்தார்களா?அல்லது வேறு வகையில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டதா? ராஜேஷூக்கு ஏதாவது பிரச்னையால் விரோதிகள் ஏற்பட்டு கொலை செய்து உள்ளார்களா? என்பது குறித்து விரிவான விசாரணை செய்து வருகிறோம். விசாரணை முடிவில் தான் உண்மை தெரிய வரும்." என்றனர்.
- ஆர்.விவேக் ஆனந்தன்