தமிழ்நாட்டில் மே மாதம் வந்தாலே அனைவருக்கும் கத்திரி வெயில் நியாபகம் வந்து மூளையிலேயே வியர்த்து ஒழுகும். ஆனால், கத்திரி வெயிலிலும் கலர்ஃபுல்லான ஒரு விசேஷம் என்றால் ஆண்டுதோறும் ஊட்டியில் நடக்கும் ஃப்ளவர் ஷோ என்பதுதான்.
‘உதகை மலர்க் கண்காட்சி’ எனும் பெயரில் அரசு சார்பில் நடக்கும் இந்நிகழ்வுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு 125வது மலர் கண்காட்சி மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் மிஞ்சியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு வழக்கத்தைவிட பெரியளவில் கூட்டம் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு காரணம். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வெளுத்துக் கட்டும் வெயில் என்பதோடு, ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் இடம்பெற்றிருந்த முதுமலை யானைக்குட்டிகளை காண பலர் நீலகிரி மாவட்டத்துக்கு வருவர் என்கிற எதிர்பார்ப்புதான்.
ஆனால் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் கூட்டம் குறைந்து சொதப்பியுள்ளது. இதற்கு காரணம் என்ன? என தோட்டக்கலை துறையின் 2ம் நிலை அதிகாரிகளிடம் விசாரித்தபோது ‘இந்த சொதப்பல் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால் தோட்டக்கலைத்துறை கீழ்நிலை பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த நேரத்தில்தான் ஃபிளவர் ஷோவுக்கான முக்கியமான அடிப்படை பணிகள் செய்ய வேண்டிய தருணம்.
அதை மனதில் வைத்துதான் பணியாளர்கள் போராட்டத்தில் அமர்ந்தனர். அதனால் ஈகோ பார்க்காமல் எங்கள் உயர் அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் அவர்களிடம் பக்குவமாக பேசி அவர்களை பணிக்கு திரும்ப வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.
நீங்களா? அல்லது நாங்களா? என பார்த்துவிடுவோம் என்று அலட்சியம் காட்டியதன் விளைவால் அடிப்படை பணிகள் உறுதியாக செய்யப்பட்டவில்லை. ஒருவழியாக போராட்டம் முடிந்து, நீண்ட நாட்களுக்குப் பின் வேலைக்கு திரும்பியவர்களால் சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்க முடியவில்லை.
எங்கள் உயர் அதிகாரிகளும், ஆயிரக்கணக்கில் செலவழித்து மலர்கண்காட்சி காண வரும் மக்களுக்கு திருப்திகரமான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என நினைக்காமலும், முயற்சி தராமலும் விட்டுவிட்டனர். இவையெல்லாம் சேர்த்து இந்த ஆண்டு மலர் கண்காட்சியை சொதப்பிவிட்டது’ என்கிறார்கள்.
ஊட்டியை சேர்ந்த பொதுநல அமைப்பினர் கூறுகையில், ‘இந்த ஆண்டு ஊட்டி சீசன் துவக்கத்தில் நெரிசலோடு துவங்கியது. ஆனால் அறை வாடகை முதல் பிரியாணி வரையில் எல்லாமே தாறுமாறான விலையில் வாடகைக்கு விடப்படுவதும், விற்கப்படுவதும் நடந்ததால் சீசனுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவஸ்தைப்பட்டதோடு, ஆத்திரமும் அடைந்தனர்.
அவர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தோரிடம் ‘சீசன்ல ஊட்டிக்கு போகாதீங்க. சொத்தை எழுதி வாங்கிடுறாங்க. மாவட்ட நிர்வாகமோ, போலீசோ எந்த அத்துமீறலையும் தடுத்து நிறுத்துறதுமில்லை’ அப்படின்னு வாய்மொழியாக நெகடீவ் பிரசாரம் செய்தனர்.
இதனால் மே 15க்கு மேல் ஊட்டிக்கு ட்ரிப் போட நினைத்த பலர் பின்வாங்கிவிட்டனர். போக்குவரத்து நெரிசல், திடீர் மழையால் அவஸ்தை, விலைவாசி ஏற்றம் என பல பிரச்னைகளால் கடுப்பான பலர் வராத காரணத்தினாலும் ஊட்டி மலர் கண்காட்சி படுத்துவிட்டது’ என்கிறார்கள்.
நாம் தோட்டக்கலைத்துறை சீனியர் அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது ‘இந்த ஆண்டு மலர் கண்காட்சி சொதப்பல் என்பது விதண்டாவாதமான பேச்சு. உண்மையிலேயே மிக சிறப்பாக ஏற்பாடாகி நடந்து வருகிறது. ஹைலைட்டாக 125 நாடுகளின் தேசிய மலர்களை காட்சிக்கு வைத்து அசத்தியுள்ளோம். இதை விடவும் என்ன சிறப்பு இருந்துவிட முடியும்?’ என்றார்கள்.