அம்பாசமுத்திரம் அருகே கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட முஸ்லீம்கள் கோயிலுக்கு அன்பளிப்பாக கடிகாரம் வழங்கியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மணலோடை தெருவில் புதிதாய் தங்கம்மன் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் 24ம் தேதி நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அப்பகுதி மக்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தது.
குறிப்பாக கோயில் சுற்றுப்புரத்தில் வசிக்கும் முஸ்லீம்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இந்த அழைப்பிதழை ஏற்றுக்கொண்ட அம்பாசமுத்திரம் ஜாமீயா பள்ளி வாசல் தலைவர் அமாலுல்லா கான், இமாம் முகமது ஷா, முகைதீன் பள்ளி வாசம் செயலாளர் மஜீத் உள்ளிட்ட 25 பேர்கள் கோயிலுக்கு வந்தனர். அவர்களை கோயில் நிர்வாகி கல்யாணராமன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
கோயில் நிர்வாகிகளை ஆரத்தழுவி வாழ்த்திய முஸ்லீம்கள், கோயிலுக்கு கடிகாரத்தை பரிசாய் வழங்கினர்.
“கோயிலைச்சுற்றி வாழும் முஸ்லீம் மக்கள் அடிக்கடி எங்களிடம் எப்போது கோயில் கட்டும் பணி முடியும், கும்பாபிஷேகம் எப்போது என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எனவேதான் அவர்களையும் கும்பாபிகேஷத்திற்கு அழைத்தோம், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் கோயில் விழாவில் முஸ்லீம்கள் கலந்து கொண்டது எங்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம்”என்றார் கோயில் நிர்வாகி கல்யாணராமன்.