கன்னியாகுமாரி மாவட்டத்தின் தமிழக - கேரளா எல்லைப் பகுதியான பனச்சமூடை அருகே உள்ள மங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் - குமாரி தம்பதியினரின் மகள் அனு 23 . இவர் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுத் திருமண நிகழ்விற்கு குடும்பமாகச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் அங்கு வந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரஜித் என்ற வாலிபர் அனுவை பிடித்துப் போகத் திருமணம் செய்து வைக்க வேண்டிக் கேட்டுள்ளார். பின்னர் பெண் வீட்டார் அவர்களது உறவினரிடம் விசாரித்த போது நல்ல பையன் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது நன்றாகப் படித்துள்ளார் என நம்பிக்கை அளித்துள்ளனர்.
இதனை நம்பிய ராஜன் தம்பதியினர் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ம் தேதி அனுவிற்கு ரஜித்துடன் 35 சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு வாரம் மட்டும் அன்பாக இருந்த ரஜித் நாட்கள் செல்ல செல்ல அவரது நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளார். முதலில் கிறிஸ்தவர் என்று சொல்லி திருமணம் செய்து கொண்டவர் ஜாதகம் சம்பிரதாயம் பில்லி சூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை முழுமையாக நம்பக்கூடிய நபராக இருந்துள்ளார்.
இதனையடுத்து வெள்ளி, செவ்வாய் தினங்களில் எந்த பொருளும் வாங்கி சாப்பிடாமலும் தீட்டு எனக்கூறி வந்ததோடு வீட்டில் பூஜைகள் பல செய்தும் வந்துள்ளார்.
மேலும் தாம்பத்திய உறவின் போது தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று கூறி கூறி சித்திரவதை
செய்ததாகக் கூறப்படுகிறது. அதிகம் படித்து நல்ல வேலையில் இருப்பதாகக் கூறி திருமணம் செய்தவர் எதுவும் படிக்காமல் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எண்ணி கணவருடன் அனுசரித்து வாழத் துவங்கி உள்ளார்.
இதற்கிடையே திருமணமான முதல் மாதத்திலேயே ஏன் கற்பம் தரிக்கவில்லை எனக் கேட்டு சித்திரவதை செய்ததோடு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கேவலமாகப் பேசியுள்ளார். ஆண் குழந்தை பிறந்தால் மட்டுமே நமது வாழ்க்கை நன்றாகப் போகும் இல்லையென்றால் ஜாதகப்படி தனக்குத் தோஷம் ஏற்படும் என்று அச்சுறுத்தி வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து திருமணம் முடிந்த 5வது மாதம் அனு கற்பம் தரித்துள்ளார். முதலில் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட ரஜித் நாட்கள் செல்ல செல்ல எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என அடிக்கடி கூறி வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் அனுவிற்கு குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் குழந்தையைச் செவிலியர்கள் ரஜித்திடம் கொடுத்த போது பெண் குழந்தை என்று கூறியதும் அதனைக் கையில் வாங்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். தொடர்ந்து குழந்தையையும் மனைவியையும் பார்க்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனையடுத்து அனுவின் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியுள்ளார்.
இச்சம்பம் குறித்து அனு மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரஜித்தை விசாரணைக்காக அழைத்த பொது அலட்சியம் காட்டி வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அனு ரஜித்தின் சொந்த ஊரான நெய்யாற்றின் கரையில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு ரஜித்தை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்திய போது தனக்கு அணு வேண்டாம் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து அனுவிடம் விவாகரத்து கேட்டு ரஜித் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விவாகரத்து கிடைத்தவுடன் 200 சவரன் தங்க நகையுடன் வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில், ரஜித் பல பெண்களுடன் தொடர்பிலிருந்து வந்தது தெரியவந்துள்ளது.