'ஹர்காரா' படத்தின் அசல் கதை 'ஓட்டத் தூதுவன் 1854' -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

படத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் சிதம்பரத்திற்கு எந்த பங்கையும் வழங்க வேண்டியதில்லை
சென்னை உயர்நீதிமன்றம், ஹர்காரா திரைப்படம்
சென்னை உயர்நீதிமன்றம், ஹர்காரா திரைப்படம்

"ஹர்காரா" படத்தின் அசல் கதை "ஓட்டத் தூதுவன் 1854" படத்தினுடையது என்கிற வாசகத்தை இடம் பெறச்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் படத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாயில் எந்த பங்கும் வழங்க வேண்டியதில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆர்.சிதம்பரம் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தில், நாட்டின் முதல் அஞ்சல்காரர் குறித்த "ஓட்டத் தூதுவன் 1854" என்ற கதையை எழுதி, திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

தனது கதையை சென்னை முகப்பேரை சேர்ந்த தயாரிப்பாளர் ராம் அருண் காஸ்ட்ரோ என்பவரிடம் கூறி, அவரையே கதாநாயகனாக வைத்து படமெடுத்துள்ளார். படத்திற்கு இருவரும் உரிமையாளர்கள் என 2014ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு, உருவான படம் 2016ல் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரும் வரவேற்பை பெற்றது.ஆனால் இதுவரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அதே கதையை வைத்து "ஹர்காரா" என்கிற படத்தை தன்னுடைய கதை மற்றும் திரைக்கதை எனக் கூறி, தயாரிப்பாளர் ராம் அருண் காஸ்ட்ரோ எடுத்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை சிதம்பரம் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வி.விஜய் பிரசாந்த் ஆஜராகி "கதை, திரைக்கதை - ஆர்.சிதம்பரம்" என்று குறிப்பிடாமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டுமென வாதிட்டார்.

பின்னர் நீதிபதி, 'ஹர்காரா' படத்தின் எழுத்துகள் ஒளிபரப்பும் போது 'ஹர்காரா' படம் ஆர்.சிதம்பரம் எழுதிய 'ஓட்டத்தூதுவன் 1854' திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்கிற வாசகத்தை ஆங்கிலம் மற்றும் அந்தந்த மொழிகளில் இடம்பெறச் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

ஒடிடி தளத்தில் வெளியிடும்போதும் இந்த வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்றும், படத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் சிதம்பரத்திற்கு எந்த பங்கையும் வழங்க வேண்டியதில்லை என்றும், ராம் அருண் காஸ்ட்ரோவிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com