மிஸ்டு கால் கொடுக்குறானுங்க! ஆபாச மெசேஜ் அனுப்புறானுங்க: கொசு ஒழிப்பு பெண்களுக்கு வந்த சோதனை

பெண் பணியாளர்களுக்கு இரவில் போன் செய்து வீண் விஷயங்களையும், ஆபாசமாக பேசுகின்றனர்.
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

‘கொசு தொல்லையை விட இவனுங்க தொல்லை ரொம்ப பெருசா இருக்குதே! இதுக்கு ஒரு மருந்து கண்டு பிடிச்சு விரட்டுங்கப்பா’ – என்று கோவை மாநகராட்சியில் பணிபுரியும் பெண்கள் டீம் ஒன்று குமுறுவதுதான் சிட்டியில் ஹாட் நியூஸ்.

வாட் இஸ் தி மேட்டர்?

மாநகராட்சி பகுதிகளில் மழை உள்ளிட்ட சமயங்களில் கொசுவினால் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட பல வகை நோய் பாதிப்புகளையும், சுகாதார சீர்கேடு பாதிப்புகளையும் ஒழிப்பதற்காக கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். நூறு வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியிலும் அப்படியான பணியாளர்கள் உள்ளனர்.

இவர்கள் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு சென்று மருந்து தெளிப்பு உள்ளிட்ட பல நோய் தடுப்பு பணிகளை செய்கின்றனர்.கோவை மாநகராட்சியில் தற்போதைய சூழலில் சுமார் அறுநூறு பெண் தொழிலாளர்கள் இந்த பணியில் உள்ளனர்.இவர்களில் மிக பெரும்பாலானவர்கள் இருபத்தைந்து முதல் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களே.

இந்நிலையில், இவர்கள் களப்பணிக்கு செல்கையில் அங்கே தங்களது மொபைல் எண்களை பொதுமக்களிடம் தந்துவிட்டு வர வேண்டியுள்ளது. தகவல் பரிமாற்றத்துக்காக இது அவசியமாகிறது. இப்படித்தான் இந்த பெண்கள் தங்களின் எண்களை பல தரப்பட்ட மக்களுக்கு தருகின்றனர்.

இச்சூழலில், சில வில்லங்க ஆண்கள் மேற்படி பெண் பணியாளர்களுக்கு இரவில் போன் செய்து வீண் விஷயங்கள் பேசுவது, வழிவது, ஆபாசமாக பேசுவது மற்றும் மெசேஜ் அனுப்புவது உள்ளிட்ட கீழ்த்தரமான செயல்களை செய்கின்றனர். இது போக நள்ளிரவில் மிஸ்டு கால் கொடுத்து டார்ச்சர் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனராம் சில சைக்கோக்கள்.

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் தோழமை கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான ஸ்டாலின் பிரபு இந்த விவகாரம் பற்றி பேசுகையில், “இந்த பணியாளர்கள் தங்களின் மொபைல் எண்களை அளிக்க வேண்டியது பணி ரீதியாக கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் இரவு பத்து மணிக்கு மேல் சில விஷமிகள் தவறான எண்ணத்துடன் இவர்களுக்கு போன் செய்தும், தகவல் அனுப்பியும் இம்சை பண்ணுகிறார்கள். இதனால் பல வீடுகளில் இந்த பெண் பணியாளர்களோடு அவர்களின் கணவர்கள் சண்டையிடுவதும் தொடர் கதையாகியுள்ளது. பல குடும்பங்கள் இந்த பிரச்னையால் நடுத்தெருவுக்கு வந்துள்ளன.

எனவே இவர்களின் பிரச்னையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கருத்தில் எடுத்து தீர்வை உருவாக்க வேண்டியது அவசியம், அவசரம். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் போல் இப்பெண் தொழிலாளர்களுக்கும் மாநகராட்சியே போன் வழங்கிவிட்டால் இந்த பிரச்னை இருக்காது” என்கிறார்.

கோவை மாநகராட்சி அதிகாரிகளும் இந்த பிரச்னை பற்றி ஆலோசிக்க துவங்கியுள்ளனராம்.

-ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com