நவீனமான இந்த இயந்திர வாழ்க்கையில் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி மற்றும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இன்று ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. கோர்ட், முக்கிய அரசு கட்டடங்கள் இருக்கும் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். அஸ்தம்பட்டி பிரதான சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆடல், பாடல் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலைகள், குழந்தைகளின் நடன நிகழ்ச்சி என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு திரை இசை பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி மகிழ்வை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சி கொண்டாடபட்டு இருந்தாலும், சேலத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பது இதுதான் முதல் முறை. முதல் முறை என்பதால் குழந்தைகளோடு ஆர்வமாக பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் பேசியதாவது, பல்வேறு இடங்களில் நடைபெற்றாலும் சேலத்தில் நடப்பது எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. காலை 6 மணிக்கே வந்துவிட்டோம் ரொம்பவே புத்துணர்ச்சியாக இருக்கிறது என்று நிகழச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.
மேலும் இந்த கொண்டாட்டத்தின் போது திடீரென மின்கசிவு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது