வந்து விட்டது இயற்கை உற்பத்தி கடலை எண்ணெய் - உற்சாகத்தில் திருவண்ணாமலை விவசாயிகள்

எண்ணெய்க்கு ’ஆதரா’ என்று பொதுவான பெயர் வைத்திருக்கிறார்கள்.
சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையம்
சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையம்

விவசாயிகள் தங்கள் சொந்த உழைப்பில் விளைவித்த நிலக்கடலையை தாங்களே செக்கில் போட்டு ஆட்டுவித்து அந்த எண்ணெய்யை நவீன முறையில் சுத்திகரித்து, பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். அந்த அரிய வாய்ப்பு கிரிவலம் மாவட்டம் திருவண்ணாமலை விவசாயிகளுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் அந்த எண்ணெய்யை வாங்கி உபயோகப்படுத்தும் வாய்ப்பு மற்ற மாவட்ட மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது!

தமிழகத்தில் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது திருவண்ணாமலை மாவட்டம். சுமார் 68044 ஹெக்டேர் நிலப்பரப்பில் இம்மாவட்டத்தில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இந்த மாவட்டத்தில் நிலக்கடலைக்கு மல்லாக்கொட்டை என்றும் இன்னொரு பெயர் இருக்கிறது. இந்த நிலக்கடலையை அவரவர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு இதுவரை விற்று வந்தார்கள். ஆனால் எல்லோரும் நிலக்கடலையை ஒரே மாதிரி, ஒரே விலையில் மதிப்பு கூட்டி விற்க விவசாய நிலக்கடலை உற்பத்தியாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அதற்காக தமிழக அரசு தெள்ளானந்தல் என்னும் கிராமத்தில் 3.20 கோடி மதிப்பில் நவீன சுத்திகரிப்பு மற்றும் பேக்கிங் யூனிட்களை திறந்திருக்கிறது.

மாவட்டம் முழுவதும் இருக்கும் இருபதாயிரம் விவசாயிகள் 36 உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மூலம் தங்கள் சொந்த உழைப்பில் மரச்செக்கில் நிலக்கடையை செக்கடித்து அந்த எண்ணெயை இங்கு வந்து சுத்திகரித்து, பேக்கிங் செய்து நேரடியாக கடைகளில் சந்தைப்படுத்தி லாபம் சம்பாதிக்கலாம்.

நம்மிடம் பேசிய தண்டராம்பட்டு விவசாயி சுதாகர், ‘இவ்வளவு நாட்களாக மல்லாக்கொட்டை பயிர் செய்து எங்கள் கஷ்டத்துக்கு ஏற்ப விலையை குறைத்து விற்றுக்கொண்டு இருந்தோம். மண்டிக்காரர்களும் எங்களை பெருசா சம்பாதிக்க விடவில்லை. இப்போ இதன் மூலம் எங்களுக்கு மறுவாழ்வு கிடைச்சிருக்கு’ என்றார்.

இந்த ஆலையை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க, தெள்ளானந்தல் தொழிற்சாலையை கலெக்டர் முருகேஷ், கலசபாக்கம் எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் கம்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த எண்ணெய்க்கு ’ஆதரா’ என்று பொதுவான பெயர் வைத்திருக்கிறார்கள். ஆதரா விவசாயிகளுக்கும், அதை வாங்கி சமைத்து உண்ணும் மக்களுக்கும் பெரும் நல் ஆதரவாக இருக்கும் என்று நம்புவோம்.

- அன்புவேலாயுதம்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com