திருச்சி கல்பாளையத்தில் வசித்து வருபவர் வி.ஏ.ஓ கலைவாணி. இவர், ஸ்ரீரங்கத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் ( MAJ traders ) என்ற கடையில் புளி வாங்கிச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 'இந்த புளி சரியில்லை. உன்னிடம் தான் வாங்கினேன்' என கடைக்கார் இப்ராஹிமிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அதற்கு இப்ராஹிம், ‘நீங்கள் அரை கிலோ 70 ரூபாய்க்கு புலி வாங்கியதாக சொல்கிறீர்கள். எங்களிடம் அந்த விலையில் புளியே இல்லை. இந்த பொட்டலமும் நாங்கள் கட்டிக் கொடுத்த பொட்டலம் இல்லை’ என மறுத்திருக்கிறார்.
ஆனாலும் கலைவாணி வாக்குவாதம் செய்ததால் இப்ராஹிம் கடையில் இருந்த மற்ற பெண்களிடம் கலைவாணியை தள்ளிவிட சொன்னதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வெளியே போன கலைவாணி சிறிது நேரத்தில் சுமார் 30 பேரை அழைத்து வந்து கடையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
உடனே அக்கம்பக்கத்து கடைகளில் இருந்தவர்களும் திரண்டு வந்து வெளியில் இருந்து வந்த குண்டர்களை தடுக்க இரண்டு தரப்பினரும் மாறிமாறி அடித்துக் கொண்டனர். இதில் பாத்திரம், பொருட்களையும் அள்ளி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்று இரு தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே மோதல் நடந்த கடையில் தக்காளி உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதுதொடர்பான புகாரின்பேரில் வி.ஏ.ஓ உள்ளிட்ட இரண்டு தரப்பினரையும், காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில், "ஒரு வியாபாரி வியாபாரத்தில் எந்த தவறை வேண்டுமானாலும் செய்து இருக்கலாம். அந்த தவறு நடந்ததாகவே இருக்கட்டும்.
ஆனால் ஒரு அதிகாரி சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பதை நன்கு தெரிந்தவர் இப்படி அடியாட்களை அழைத்து வந்து தாக்கத் தொடங்கினால் ஒற்றை ஆளாய் கடையில் நின்றுகொண்டு கோடிக்கணக்கான ரூபாய் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் எங்கே போய் தஞ்சம் அடைவது ?
எனவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர் அரசு அதிகாரி என்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் விட்டால் எங்களுடைய போராட்டம் வேற மாதிரி இருக்கும்" என்றார்
இந்த சம்பவம் நடந்த கடையின் சி.சி.டி.வி பதிவில் கலைவாணி வந்து பேசுவது, பின்னர் திரும்பிப் போய் 30 பேருடன் வந்து தாக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பதால் இந்த பிரச்னை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- ஷானு