பலத்த மழையினால் பசுமைக் குடில் பயிர்சேதம் - ஒரேநாளில் 50 லட்ச ரூபாய் கடனாளியாகி கதறும் பட்டதாரி இளைஞர்

ஒரே மழையில் சேதமான பசுமை குடில் பயிர்களால் 50 லட்சம் ரூபாய் கடனாளியான பட்டதாரி விவசாயி, நிவாரணம் கோரி உருக்கத்துடன் வேண்டுகோள்.
பசுமை குடில் மழையால் சேதம்
பசுமை குடில் மழையால் சேதம்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த திண்டல் பஞ்சாயத்தில் உச்சம்பட்டி கிராமத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒரே நாளில் பசுமை குடில் மற்றும் பயிர்கள் சேதமானதில் ரூ.50 லட்சம் கடனாளியான விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். செந்தில், பட்டதாரி இளைஞர் வங்கி கடன் உதவியுடன் சுமார் 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பசுமைக் குடில் அமைத்து தக்காளி நாற்றுகள் பயிர் செய்துள்ளார்.

ஒரு தக்காளி நாற்று மட்டும் 10 ரூபாய் விலையில் வாங்கிய அவர் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிர் செய்துள்ளார். இதனிடையே நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பசுமை குடில் உடைந்து முற்றிலும் சேதமடைந்தது. மேலும் குடிலில் பயிரிடப்பட்டு வந்த தக்காளி நாற்றுகள் முதற்கொண்டு பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டன.

பயிர்கள் சேதம்
பயிர்கள் சேதம்

இதனால் கடனாளியாக மாறிப்போனதாக பட்டதாரி இளைஞர் வருத்தத்துடன் தெரிவித்தார். கடன் வாங்கிய வங்கியில் காப்பீடு தொகை செலுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் செலுத்த முடியவில்லை. இந்த பசுமை குடிலுக்கு ஒரு வருடம் மட்டுமே காப்பீடு வழங்க முடியும் என வங்கியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நேற்று பெய்த கன மழையில் முற்றிலும் சேதம் அடைந்ததில் தனக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை இழப்பு நேர்ந்துள்ளதாக செந்தில் தெரிவித்துள்ளார். வங்கியில் வழங்கிய ஒரு வருட காப்பீடு தொகையை புதுப்பித்து கொடுத்திருந்தால் சேதமான பசுமை குடிலுக்கு காப்பீடு தொகை பெற்றிருப்பேன். எனக்கு கடன் கொடுத்த வங்கி செய்த பிழையால் நானும் என் குடும்பமும் கடனாளியாக மாறியுள்ளோம்.

பசுமை குடில் முற்றிலுமாக சேதம்
பசுமை குடில் முற்றிலுமாக சேதம்

இதுகுறித்து வங்கியில் தெரிவித்த போது பயிர்கள் மற்றும் பசுமை குடில் மழையினால் சேதமானதிற்கு பொறுப்பேற்க முடியாது என கைவிரித்து விட்டனர், இதனால் எங்கள் குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளோம், விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் எங்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்குமாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

- பொய்கை. கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com