‘ஒரு கைரேகை வை.. தாத்தா’ - ரூ.3 கோடி சொத்தை அபகரித்த பேரன்கள் - ஆட்சியரிடம் முறையீடு

சொந்த தாத்தாவையே ஏமாற்றி 3 கோடி சொத்தை பேரன்கள் அபகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனிச்சாமி
பழனிச்சாமி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (103). இவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர். இதில் 3 மகன்களும் இறந்துவிட்டதால் இவர் தற்போது மகள்களுடன் வசித்து வருகிறார்.

இவருக்குச் சொந்தமான சுமார் 3 கோடி மதிப்பிலான 1.62 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் பழனிச்சாமியிடம் மூத்த மகனின் பிள்ளைகள் மற்றும் அவரது நண்பர்கள் விவசாய கிணற்றுக்கு இலவச மின் இணைப்பு வாங்க தங்கள் கையெழுத்து வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

பின்னர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று முதியவரிடம் கைரேகை மூலம் முழு சொத்தையும் தங்களது பெயருக்கு எழுதி வாங்கியுள்ளனர்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவரிடம் கட்டை விரலில் இருந்த மையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மருமகள் அன்னக்கிளி முதியவரிடம் கேட்டுள்ளார்.

அப்போது பேரப்பிள்ளைகள் அழைத்துச் சென்ற விவரத்தைக் கூறியுள்ளார். இதன் பின்னரே முதியவரை ஏமாற்றி அவருடைய சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கியது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ‘நான் பாலக்கோடு கிராமத்தில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

எனக்கு லட்சுமி, மங்கம்மாள் என்ற 2 மகளும், இடும்பன், ஈஸ்வரன், ஆறுமுகம் என்ற 3 மகன்களும் இருந்தார்கள். எனது மகன்கள் 3 பேரும் இறந்துவிட்டனர்.

எனது குடும்பத்திற்குச் சொந்தமாக அள்ளி கிராமத்தில் சுமார் 1.63 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் எனது மகன் ஆறுமுகத்தின் மகன்களான கார்த்திக், பார்த்திபன், லோக்கேஷ் ஆகிய 3 பேரும் ‘கிணற்றுக்கு இலவச மின்சாரம் வாங்க வேண்டும்.

நீங்கள் வந்து ஒரு கையொப்பம் போட வேண்டும்’ என்று கூறியதை நம்பி நான் கையெழுத்துப் போட்டேன். நான் கையொப்பம் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விட்டேன்.

இதன் பிறகு எனது மருமகள் அன்னக்கிளி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள்.

போலீசாரின் விசாரணையில்தான் என்னுடைய சொத்தை எழுதி வாங்கியதை நான் தெரிந்து கொண்டேன். கார்த்திக், பார்த்திபன், லோக்கேஷ் ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து என்னுடைய சொத்தை மீட்டுத் தர வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com