திருவண்ணாமலை அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அடுத்த வானாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 1964ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் முன்னாள் மாணவர் மன்ற துவக்க விழா நேற்று விமர்சையாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் வழக்கறிஞர்களாகவும், ஆடிட்டர்களாகவும், அரசியல் பிரமுகர்கள் ஆகவும் திகழ்ந்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களில் சிலர் இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர whatsapp குழு அமைத்து அதில் அனைத்து மாணவர்களையும் ஒன்று திரட்டி மாணவர் மன்றம் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்தனர்.
அதன்படி இன்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இதற்கு உண்டான நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் இந்நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினர். 60 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில், இன்று பள்ளிக்கு வந்து பழைய நண்பர்களுடன் சந்தோஷமாக பேசி பொழுதை கழித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் முன்னாள் மாணவர்கள் மன்றத்தை துவங்கியதுடன் புதிய தலைவர் ,செயலர்,பொருளாளர் பதவியேற்றுக்கொண்டனர்.
விரைவில் அனைத்து முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்போடு பள்ளிக்கு தேவையான நூலக கட்டிடம், அதற்குண்டான புத்தகங்கள், அடிப்படை வசதிகள், பள்ளி சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்தும் விரைவில் ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் எனவும், 60 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியின் நிலையும் தற்பொழுது உள்ள நிலையும் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பல்வேறு நண்பர்களை இந்த இடத்தில் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.