தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13ம் தேதி இரவு கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டதில் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய நிலையில் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தற்போது செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என முடிவுவெடுத்து அது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
ஆனால் முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்தை பரிசீலித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளதால் மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாக கூறப்பட்டு உள்ளது. அவரை அமலாக்கத்துறை கைது செய்ததை கடிதத்தில் குறிப்பிடாதது ஏன்?’ என, கேட்டு பரிந்துரையை திருப்பி அனுப்பி இருந்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆளுநர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும்? என ஆலோசிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி இருந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அதில், மின் துறையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோரிடம் வழங்க ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர’ மறுப்பு தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடர முடியாது என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க மறுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதே நேரம், நிர்வாக ரீதியாக செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.