விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சுரேஷ், ராஜமூர்த்தி, மலர்விழி, விஜயன், சங்கர், ராஜவேல், ஆபிரகாம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதான ராஜவேல் மற்றும் சரவணன் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர்.
இதனால் எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மற்றும் மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் 52 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அறிக்கை அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆர்.என்.ரவி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? விஷ சாராயம் எப்படி விற்கப்படுகிறது? விற்கப்படவில்லை எனில், இத்தனை கைது ஏன்? என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.