அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி சிறப்பு உரையாற்றினார்.
முன்னதாக மாவட்டச் செயலாளர் ஷேக் தாவூத் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடுமையான பணிச் சுமைகளுடனும், அளவு கடந்த நெருக்கடிகளுடனும் பணிபுரிந்து வரும் வளர்ச்சித் துறை ஊழியர்களின் நலனை சார்ந்த கோரிக்கைகளை நிர்வாகம் காலதாமதப்படுத்தி வருவதை கண்டிக்கிறோம்.
மேலும் திட்டமிட்டபடி மாநிலம் தழுவிய ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை மேலும் காலதாமதம் இன்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனே வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். வளர்ச்சி துறையில் வட்டார உதவி பொறியாளர்கள் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கும் உச்சவரம்பினை 5 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.