திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதைமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். அரசு பேருந்து ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க-வின் எல்.பி.எஃப் தொழிற்சங்கத்தின் தேர்தல் நடந்துள்ளது. இதில் ராஜ்குமார் இருந்த அணியினர் ஒரு பிரிவு, சதானந்தம் என்பவர் இருந்த அணி மற்றொரு பிரிவாக போட்டியிட்டுள்ளது.
இந்த தொழிற்சங்க தேர்தலில் ராஜ்குமார் இருந்த அணி தோல்வி அடைந்துள்ளது. இதற்கு எதிராக வெற்றி பெற்றவர் சதானந்தம். இந்த நிலையில் பழிவாங்கும் நோக்கத்துடன் சேலம் அரசு பேருந்து இயக்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரை பழனியில் இருந்து திருப்பூர், அவிநாசி, வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பேருந்தில் பணி அமர்த்துமாறு கிளை மேலாளர் கார்த்திகேயனுக்கு சதானந்தம் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளார்.
இதை ஏற்றுக்கொண்ட கிளை மேலாளர் கார்த்திகேயன் ஓட்டுநர் ராஜ்குமாரை மேட்டுப்பாளையம் பேருந்துக்கு மாற்றியுள்ளார். அந்த பேருந்து புதிய வழித்தடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே தினமும் ஒரு ஓட்டுநர் பணிக்கு சென்று வந்துள்ளனர்.
அதாவது காலை 2.30 மணிக்கு பழனி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி மேட்டுப்பாளையம் செல்ல 4.30 மணி ஆகிறது. பின்னர் 10 நிமிட இடைவெளியில் மீண்டும் பழனியை நோக்கி 4.30 மணி நேரத்தில் திரும்ப வருகிறது.
ஒரு நாளைக்கு 2 முறை சென்று வந்தால் இரவு 10 மணிக்கு பழனி வந்து சேரும். மேலும் உறக்கமே 4 மணி நேரம்தான் என்றும், தனக்கு மாற்று பேருந்தில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கிளை மேலாளர் கார்த்திகேயனிடம் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அதற்கு கிளை மேலாளர் கார்த்திகேயன் தகாத வார்த்தைகளால் பேசி டேபிளை தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ராஜ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்யப் போவதாக வீடியோ வெளியிட்டு விட்டு விஷம் குடித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ராஜ்குமாரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராஜ்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘எனது சாவுக்கு காரணம் கிளை மேலாளர் கார்த்திகேயன். எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி தகாத வார்த்தைகளால் திட்டினார்’ என கூறியுள்ளார்.