ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

திருச்சி: ‘ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்பப் பெறப்பட்டது ஏன்?’ - ஜி.கே.வாசன் புதிய விளக்கம்

‘ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்பப் பெறப்பட்டது ஏன்?’ என்பது குறித்து ஜி.கே.வாசன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு நிர்வாகியின் இல்லத் திருமண விழா திருச்சி வயலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதன் பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்தால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

இந்த முறை விவசாயிகள் ஏமாறாமல் தண்ணீரை முன்கூட்டியே திறக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் நீரின் அளவை அதிகரித்து திறக்க வேண்டும். காவிரி வைகை குண்டாறு திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கி விரைந்து பணியை அரசு முடிக்க வேண்டும்.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகளை அரசு நிறுத்திட வேண்டும். பொதுப்பணித்துறை இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமீபத்தில் பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பருத்தி, எள் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே உரிய இழப்பீடு தர வேண்டும்.

நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். விழுப்புரம், செங்கல்பட்டு தஞ்சையில் கள்ளச்சாராயத்தால் 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது? ஏன் அரசால் தடுக்க முடியவில்லை. இதனுடைய பின்னணி, காரணம் என்ன? போதைப் பொருட்கள் கள்ளச்சாராயத்தினால் கொள்ளை, கொலை, வழிபறி அடித்தளமாக இருந்து வருகிறது. எனவே இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. மக்களை காப்பாற்றக்கூடிய பணியில் அரசு செயல்பட வேண்டும். அரசு இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் மதுக்கடைகளை புதிய புதிய வடிவங்களில் திறக்கக்கூடிய நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது.

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக்கை கொடுப்போம் என அறிவித்துவிட்டு எப்படி டாஸ்மாக்கை குறைப்பார்கள். தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை கூறியுள்ளது.

மின்சாரம் கணக்கீடு மாதம் ஒருமுறை கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

கோவிட் சமயத்தில் வளர்ந்த நாடுகள்கூட பாதிக்கப்பட்டபோது இந்தியா அதிகம் பாதிக்கப்படாமல் படிப்படியாக பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய நிலை ஏற்பட்டது. இதற்கு பி.ஜே.பி-யின் ஆட்சிதான் காரணம்.

ஆகையால் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி-யின் ஆட்சிதான் தொடரும். 2000 ரூபாய் திரும்பி பெறுவது நேர்மையானவர்களுக்கு நல்ல செய்தி. வரி ஏய்ப்பு, லஞ்சம், ஊழல், கடத்தல்காரர்களுக்கு பாதகமான செய்தி.

தவறானவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுகின்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தவறான பாதையில் செல்வோருக்கு திருந்துவதற்கான இது ஒரு வாய்ப்பு என்றுகூட சொல்லலாம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com