மீனைப் பார்த்து குட்டையில் இறங்கிய சிறுமி ; உயிரை விட்ட சோகம் - என்ன நடந்தது?

குளத்தில் ஆழமான பகுதிக்கு மீன் பிடிப்பதற்காக திவ்யா தண்ணீரில் இறங்கியுள்ளார். எதிர்பாராத விதமாகச் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி
குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் - சங்கீதா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி நீண்ட காலமாகக் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து இருந்த அவர்கள் திவ்யா என்ற பெண் குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று திவ்யா (12) அதே பகுதியைச் சேர்ந்த காவியா (11) மைதிலி (13) நித்யா ஸ்ரீ (9) ஆகிய நான்கு பேரும் மெணசி - விழுதுப்பட்டி சாலையில் உள்ள புளியாங்குட்டையில் உள்ள குளத்தில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு மீன் பிடிப்பதற்காக திவ்யா தண்ணீரில் இறங்கியுள்ளார். எதிர்பாராத விதமாகச் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற 3 பேரும் கிராம மக்களிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 8 அடி ஆழத்தில் சேற்றில் சிக்கியிருந்த சிறுமியின் உடலை போராடி மீட்டனர்.

இதனையடுத்து சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாத தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுமி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com