அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி தீபா. தம்பதியின் மகள் அகல்யா (8). இவருக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுநீர செயல்பாடு குறைவு காரணமாக புதுவை, சென்னை, தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் உயர் சிகிச்சை பெற வேண்டி கடந்த மாதம் 30ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு இருமுறை சிறுமி அகல்யாவிற்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.
இதன் பிறகு சிறுமி அகல்யாவிற்கு ரத்த அழுத்தம் உயர்ந்து வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது படுக்கைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து அவரது தாய் எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதை குடித்து பார்த்த சிறுமி தண்ணீர் இல்லை என தெரிந்து துப்பியுள்ளார். ஆனாலும் சிறுமிக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் சிறுமி அகல்யா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து குழந்தையின் இறப்பு குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுநீர செயல்பாடு குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி ஒருவர் மருத்துவமனையில் நேர்ந்த கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.