வீட்டிற்கு முன் எரிக்கப்படும் குப்பை- கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் : தர்ணாவில் ஈடுபட்ட பெண்!
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சில்லாரஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள குப்பைகள் அனைத்தும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் வைத்து சேகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டு காலமாக குப்பை சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டும், அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் விதிகளுக்கு மாறாக எரியூட்டப்பட்டு வருவதாக தெரிகிறது.
இக்குப்பை சேகரிப்பு மையம் அருகில் இந்திராணி என்பவர் அவர் மகனுடன் வசித்து வருகிறார். வீட்டின் அருகே தினசரி ஊராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு எரிக்கப்படுவதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளார்.

இது குறித்து ஆட்சியர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை பலமுறை இந்திராணி கோரிக்கை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. அதுதவிர குப்பை பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றிவருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எரியூட்டப்படும் குப்பையால் இந்திராணி உடல்நிலை மற்றும் அவரது மகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு, தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயதில் ஊராட்சி முழுவதும் எல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு கொடுத்துள்ள நிலையில், இந்திராணி குடும்பத்திற்கு மட்டும் இணைப்பு தர ஊராட்சித் தலைவர் மறுத்துவிட்டார்.
கடந்த வாரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் நேற்று மகனுடன் கடத்துாரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் இந்திராணி அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் இரவு 7.30 மணிவரை ஈடுபட்டார். பின்பு வருவாய் கோட்டாச்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் இன்று கள ஆய்வு செய்து தீர்வு காண்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டார் இந்திராணி.
- பொய்கை.கோ.கிருஷ்ணா