நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களிலும் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் 1500 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்காக தருமபுரி உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் களிமண்ணால் ஆன மூன்று முக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், உள்ளிட் பல வடிவங்களில் அதாவது 30-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்தனர்.
ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை கொண்ட சிலைகள் விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு படைக்கப்படும் பழங்கள், சிலைகளை அலங்கரிக்கும் குடைகள் பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆறு, தென்பெண்ணை ஆறு, வாணியாறு அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் தரப்பு கூறுகையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி போலீசாருக்கு விடுமுறை கிடையாது. அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என மேல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். உடல் நல பாதிப்பு உள்ளிட்ட முக்கியமானதிற்கு மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.