இலவச பேருந்து சேவை: ‘நான் பேசியதை திரித்துக் கூறிவிட்டனர்’ - தென்காசி ஆட்சியர் விளக்கம்

இலவச பேருந்து சேவையால் நஷ்டம் இருந்தாலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு நஷ்ட ஈடாக பகுதிக்கு 15 ஆயிரம் வீதம் ஈடுதொகை வழங்கப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்

இலவச பேருந்து விவகாரத்தில் நான் பேசியதை திரித்துக்கூறிவிட்டனர் என தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து சேவை திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த மே 1ம் தேதி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா வாடியூரில் மே தின கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் கலந்துக்கொண்டார்.

தங்கள் பகுதிக்கு கடந்த காலங்களில் 13ம் எண் கொண்ட பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வர வசதியாக இருந்தது. தற்போது அந்தப் பேருந்து இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் சிரமப்படுவதாக வேதனை தெரிவித்தனர். மேலும் முன்பு இயக்கி வந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு மாவட்ட ஆட்சியர், “மகளிருக்கு இலவச பேருந்து அளித்ததால் போக்குவரத்துக் கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தி உள்ளது. இருப்பினும் இந்தப் பகுதிக்கான பேருந்தை அரசு இயக்குவது குறித்து வாய்ப்புகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியரின் பேச்சை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் மகளிருக்கான பேருந்து சேவையை அரசு குறைந்துள்ளதாகவும், கிராமப்புற பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”இலவச பேருந்து சேவை விவகாரத்தில் தான் பேசியதை திரித்துக்கூறி பரப்பி விட்டுள்ளனர். மேலும் இலவச பேருந்து சேவை அந்தப் பகுதி மக்களுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்வேன் என்று கூறினேன். இலவச பேருந்து சேவை குறித்து நான் கூறியதாக மீடியாக்களில் சிலர் திரித்துக்கூறி உள்ளனர்.

கடந்த 2 நாட்களாகவே இந்தச் சம்பவம் வந்துக்கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நான் பேசியதாகச் சுட்டிக்காட்டி உள்ளார். அது மாதிரி நான் எதையும் கூறவில்லை. இலவச பேருந்து சேவையால் நஷ்டம் இருந்தாலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு நஷ்ட ஈடாக பகுதிக்கு 15 ஆயிரம் வீதம் ஈடுதொகையை அரசு வழங்குகிறது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com