கணவனை இழந்து வாடும் தாய் தன் மகனின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என உறுதி பூண்டு வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை காட்டி ஏமாற்றிய கோஷ்டியிடம் ரூ.4.5 லட்சத்தை பறிகொடுத்துள்ளார்.
சிவகாசி, நியூ ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் வீரபுத்திரன் மனைவி தேன்மொழி. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தனது மகன் சங்கிலி பாபுவை தேன்மொழி கஷ்டப்பட்டு எம்.பி.ஏ படிக்க வைத்தார். இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்னியம்மபட்டி விலக்கு அருகே பிள்ளையார் குளத்தை சேர்ந்த பொம்மன், அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோரின் அறிமுகம் தேன்மொழிக்கு கிடைத்தது.
அப்போது அவர்கள் இருவரும் நாங்கள் இன்டர்நேஷனல் சர்வீஸ் நிறுவனம் நடத்துகிறோம். ரஷ்டியாவில் நிறைய பேருக்கு வேலை வாங்கி தந்துள்ளோம். உன் மகன் எம்.பி.ஏ பட்டதாரியான சங்கிலி பாபுவுக்கு ரஷ்டியாவில் நல்ல வேலை வாங்கித் தருகிறோம். மாதம் அவருக்கு ரூ. 2 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி தேன்மொழியும், சங்கிலிபாபுவும் ரூ.4.50 லட்சத்தை பொம்மன் அக்கவுண்ட்டில் செலுத்தினர். ஆனால் சங்கிலிபாபுவுக்கு ரஷ்யாவில் வேலை கிடைக்கவில்லை.
உடனே பணத்தை தேனிமொழி திருப்பி கேட்டார். இதையடுத்து பொம்மன் அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனத்தை மூடி எஸ்கேப் ஆகினர். அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தேன்மொழி உணர்ந்தார். இதையடுத்து தேன்மொழி அளித்த புகாரின் அடிப்படையில் வன்னியம்மப்பட்டி போலீசார் பொம்மன், நாகலட்சுமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.