வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 151 பேரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபேஸ்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 151 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூபாய் 1 கோடியே 10 இலட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றிய இருவர்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றிய இருவர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாரியம்மன் கோயில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் பாலகுமார். இவர் மற்றும் இவரது நண்பர்கள் உள்ளிட்ட சிலர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், "குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 151 பேரிடம் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் சிங்கப்பூரில் சூப்பர்வைசர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், டிரைவர், உதவியாளர் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் எடுப்பதாக்க் கூறி ரூ.1 கோடியே 10 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக" குறிப்பிட்டிருந்தனர்.

அந்த புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து மயிலாடுதுறை எஸ்.பி மீனா உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி கணேசன், மற்றும் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை போத்த ராஜா தெருவைச் சேர்ந்த அண்ணாச்சி மகன் பிரேம்குமார் [36] என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு ஏஜெண்டாக இருந்து பணம் வசூல் செய்து கொடுத்த குத்தாலம் ஆர்.கே நகரைச் சேர்ந்த மதியழகன் [40] என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com