ஒருவரை நான்கு பேர் தாக்கிய வீடியோ வைரல்.. 3 பேரை கைது செய்த போலீஸார்!

முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் சமூகவலை தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கைது செய்யப்பட்ட மூன்று பேர்
கைது செய்யப்பட்ட மூன்று பேர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடகால் கிராமம் காந்திநகரைச் சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆற்றங்கரை தெரு மணிமாறன், விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு இருதரப்பினருக்கும் சமாதானம் செய்துவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் வடகால் கடைவீதிக்கு வந்த நரேஷை மேற்படி மணிமாறன், விக்னேஷ், நேசமணி மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட நால்வரும் சேர்ந்து கொண்டு அரிவாள், கத்தி, மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். அத்துடன் நரேஷுக்கு ஆதரவாக தாக்குதலை தடுக்க வந்த ராஜா, பாக்கியராஜ் ஆகிய இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் எதிர் தரப்பைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காயமடைந்தார்.

படுகாயமடைந்தவர்கள்
படுகாயமடைந்தவர்கள்

காயமடைந்த அனைவரும் அவரது ஆதரவாளர்களால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பைச் சேர்ந்த மணிமாறன், ராஜராஜன், விக்னேஷ் ஆகிய மூவரை கைது செய்ததோடு தலைமறைவான சிலரையும் தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதல் பட்டபகலில் கடைத்தெருவில் நடைபெற்றதால் அந்த காட்சியை தனது செல்போனில் படம் பிடித்த ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

-ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com