‘செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி ரெய்டு தாமதமாக நடக்கிறது’ - செல்லூர் ராஜூ

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மிக தாமதாக ஐ.டி ரெய்டு நடப்பதாகவும், முன்கூட்டியே நடத்தியிருந்தால் கள்ளச்சாராய மரணம் நடந்திருக்காது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜி, செல்லூர் ராஜூ
செந்தில் பாலாஜி, செல்லூர் ராஜூ

மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வகுப்பறை கட்டும் பணிக்காக பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.

இதன் பிறகு செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ஐ.டி ரெய்டு மிக தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்திருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்டவை நடந்திருக்காது.

சோதனைக்கு வந்த ஐ.டி அதிகாரிகளை தாக்குவதன் மூலம் தி.மு.க வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்று பயணம் இன்ப சுற்றுலாபோல தான் இருக்கிறது. அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை. முதலீடு செய்யவே சென்றுள்ளார்.

உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆரைப் போல வித விதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. தி.மு.க ஒரு விளம்பர அரசு. செயல்படுகிற அரசு அல்ல.

காவல் துறை டி.ஜி.பி-யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. அவருடைய கை கட்டப்பட்டுள்ளது. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால், தமிழ்நாட்டில் மதுவால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.

புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் தி.மு.க பங்கேற்க வேண்டும். செங்கோல் மீது மதச்சாயம் பூசக்கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத தி.மு.க இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என சொல்வது வெளி வேஷம். ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும். தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும். ‘தல’ என சொல்லப்படுபவர்கள் யாரும் தல இல்லை. ‘உண்மையான தல தோனி ஜெயிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com