தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ பாதுகாப்பு நடவடிக்கைகளை தாண்டி துரதிருஷ்டவசமாக 3 பேர் நீரிலே மூழ்கி உயிரிழந்த வருந்தத்தக்க நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.
ஒருவர் மூச்சு திணறி இருந்ததாக செய்திகள் தெரியப்படுகிறது. இவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு சட்டசபையிலே இந்த அரசின் கவனத்திற்கு சித்திரை திருவிழா பாதுகாப்போடு செய்யப்பட வேண்டிய, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து வைக்கப்பட்டபோதும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கை குறைவாகத்தான் இருந்தது.
இந்த 2 ஆண்டுகளில் தி.மு.க அரசு சாதனை செய்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பறைசாற்றிக்கொள்கிறார். ஆனால் 2 ஆண்டில் தி.மு.க அரசு சாதித்ததை காட்டிலும், சறுக்கியதுதான் அதிகம்.
மேலும் முன்னுக்குப் பின் முரணாக முடிவெடுத்து, குளறுபடிகளின் மொத்த அடையாளமாக இருக்கிறது. தி.மு.க ஆட்சியிலே அமருவதற்கு உறுதுணையாக இருந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் வைத்திருப்பதால் அந்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள்? என்கிற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கின்றனர்.
இரண்டு 2 திராவிட முன்னேற்றக் கழகம் பின்வாங்கியதுதான் அதிகம். பின்வாங்கியதிலேயே அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள்தான் அதிகம். சாதனை என்பது எதுவும் சொல்லிக் கொள்வதற்கு எதுவும் இல்லை.
இரண்டு ஆண்டுகளிலே இன்றைக்கு கஞ்சா வேட்டை என்று காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. எங்கும் கஞ்சா நிறைந்து இருக்கிறது.
மதுபான விற்பனை என்பது கல்யாண மண்டபங்களிலும், விளையாட்டு திடல்களிலும் சிறப்பு கட்டணத்தை செலுத்தி மதுபானங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று விதிக்கப்படுகிற அரசாணையை, எதிர்ப்பு வந்ததும் மறுபடியும் பின்வாங்குகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு வெற்றி பெற்றது 30 சதவீதம் என்றால், தோல்வி 70 சதவீதமாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசு தோல்வி அரசாக உள்ளது. அமைச்சருடைய ஆடியோ இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
நாம் நிறைவேற்றுகிற மசோதா, மக்களுக்கான மசோதா, மக்கள் நலன் காக்கிற மசோதா, மக்களை பாதுகாக்கிற மசோதா என்று புரிய வைக்க வேண்டிய இடத்தில் புரிய வைத்து, சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி, ஒப்புதல் பெறுவதுதான் ஒரு அரசின் ராஜதந்திரம்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ராஜதந்திரம் ஆளுநரிடத்தில் எடுபடவில்லையோ? என்ற ஒரு விவாதமாக இருக்கிறது’ என ஆர்.பி.உதயக்குமார் கூறினார்.