காற்றாலை அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு

காற்றாலை ஊழியர்கள் தாக்கியதாக முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் எம்எல்ஏ தாக்கியதாக காற்றாலை ஊழியரும் புகார்
முன்னாள் எம்எல்ஏ, காற்றாலை
முன்னாள் எம்எல்ஏ, காற்றாலை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிக அளவில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஜெம்கார்ப் என்கிற நிறுவனம் தற்போது காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

ஜெம்கார்ப் நிறுவன ஊழியர்கள் நேற்று ஓட்டப்பிடாரம் பகுதியில் இருக்கும் பெரியகுளம் கண்மாய் வழியாக கனரக வாகனங்களில் காற்றாலைக்குத் தேவையான உபகரணங்களை கொண்டு சென்றனர். அப்போது விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் பெரியகுளம் குளத்தின் பாசன கால்வாய் வழியாக செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் அங்குள்ள விவசாயிகளுக்கும், காற்றாலை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து காற்றாலை ஊழியர்கள் தன்னை தாக்கி விட்டதாக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ். முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் தான் தங்களை தாக்கி விட்டதாக காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றும் சிவில் இன்ஜினியர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காற்றாலை
காற்றாலை

இது பற்றி முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜிடம் கேட்டோம் "கடந்த சில வருடங்களாக ஓட்டப்பிடாரம் பகுதியில் காற்றாலை நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு காற்றாலைகளை அமைத்து வருகிறார்கள். கனரக வாகனங்கள் மூலம் விவசாய நிலங்கள் வழியாக செல்கிறார்கள். இதனால் விவசாய நிலங்கள் பால்படுகின்றன. தண்ணீர் வரத்து குறைவு காரணமாக கால்வாய்கள் அளிக்கப்படுகின்றன. இதற்காக அவர்கள் எந்த விவசாய நில உரிமையாளர்களிடமும் அனுமதி பெறுவதில்லை. கேட்டால் அப்படித்தான் செல்வோம் என்று பேசுகிறார்கள்.

நேற்றும் அப்படியே சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் என்னை அழைத்தனர். உடனே நான் அங்கு சென்றேன். நான் இந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ என்று சொன்ன பிறகும், காற்றாலை நிறுவன ஊழியர்கள் என்னை மதிக்காமல் என் மீது தாக்குதல் நடத்தினார்கள். உள்ளூர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களின் ஆதரவு இருப்பதால் அவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள்" என்றார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுந்தர்ராஜ்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுந்தர்ராஜ்

முன்னாள் எம்எல்ஏவால் தாக்கப்பட்டதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவில் இன்ஜினியரிடம் பேசினோம். "முன்னாள் எம்எல்ஏவை யாராவது தாக்குவார்களா. அவர் தான் எங்களிடம் தேவையில்லாமல் தவறாக பேசி என்னை சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். ஒழுங்கு மரியாதையாக இங்கிருந்து போய் விடுங்கள், இல்லை என்றால் உயிரோடு போக முடியாது என்று மிரட்டினார்" என்கிறார் சிவில் இன்ஜினியர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com