அன்னிய செலாவணி மோசடி: டிடிவி தினகரன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவு
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அதிமுக முன்னாள் எம்பி-யும், அமமுக பொதுச்செயலாளரருமான டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர், அன்னியச்செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாததால் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் இன்று (செப்டம்பர் 13) விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகும், அபராதத்தை செலுத்தாததால் தினகரனை திவாலானவர் என சட்ட ரீதியாக அறிவிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை.இது உரிமையியல் பிரச்சினை கிடையாது என்றார்.

டிடிவி தினகரன் சா்ரபில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், தினகரனுக்கு உள்ள நன்மதிப்பை கெடுக்கும் நோக்கத்தில் திவாலானவர் என இந்த நோட்டீஸை பிறப்பிக்கபட்டுள்ளதாகவும், இது சட்ட ரீதியாக தவறு என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com