தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று 8-வது நாளாக வாயில் கருப்புத் துணியை கட்டி கொண்டு நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். அவர் நம்மிடம், "மத்திய, மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல், விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ராமேஸ்வரத்தில் பா.ஜ.க நடைபயணத்தை துவக்கி வைக்க வந்த பலரும் பொய்யையே பரப்புரையாற்றி சென்றுள்ளனர். அவுங்க பேசுவதெல்லாம் பொய்தாங்க.
விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுத்திருப்பதாகவும், விவசாயிகளின் அனைத்து தேவைகளையும், கோரிக்கைகளையும் மத்திய அரசு பூர்த்தி செய்து விட்டதாக பொதுக்கூட்டத்தில் வாய்கூசாமால் பொய் பேசுகிறார்கள். நம்மாளுகளும் அதை கேட்டு கைத்தட்டுறாங்க. என்னத்த சொல்றதுன்னே தெரியல.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை விடுத்தால், கோதாவரி - காவிரி -குண்டாறு இணைப்பு என்று கதையைக்கூறி தப்பித்துக்கொள்கிறார்கள்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் விவசாயிகளின் கதி அதோகதிதான். ஆகவேதான், நாங்கள் இன்று வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு, விவசாயிகளின் வாயில் கருப்புத்துணியைக் கட்டாதே என்ற கோஷத்தோடும், போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்" என்றார்.
- திருச்சி ஷானு