மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை: நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்!

திருமுல்லைவாசல் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மணல் திட்டால் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் மீனவர்கள் அவதி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்.
நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்
நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கடற்கரை கிராமத்தில் வருடா வருடம் கோடைக் காலங்களில் கடல் அரிப்பால் உப்பனாற்றின் குறுக்கே மணல் திட்டு உருவாகி முகத்துவாரம் அடைபட்டு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கேட்டு மீனவர்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடமும் மணல் திட்டு ஏற்பட்டு முகத்துவாரம் அடைபட்டு மீன் பிடிக்க செல்ல முடியாமல் பெரும் வாழ்வாதார பாதிப்புடன் இருந்து வருகின்றனர்.

இது குறித்து மீனவர்களிடம் பேசினோம், "உப்பனாற்றின் மூலம் தான் படகுகளில் கடலுக்கு சென்று வருகிறோம். தற்போது உப்பனாற்றில் நீர் வரத்து இல்லாத காரணத்தால் படகுகள் கடலுக்கு செல்லும் முகத்துவாரமானது கடல் அரிப்பால் மூடி அந்த பகுதியில் மிகப்பெரிய மணல் திட்டு ஏற்பட்டுவிட்டது.

இதனால் படகுகளை நிறுத்த முடியாமலும், கடலுக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகிறோம். எனவே மணல் திட்டை அகற்றி மீன் பிடி தொழிலுக்கு செல்ல எந்தவித தடையும் இல்லாத நிலை உருவாக்கித்தர வேண்டும் என்றபடி மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றனர்.

ஆய்வு செய்யும் அமைச்சர், ஆட்சியர்
ஆய்வு செய்யும் அமைச்சர், ஆட்சியர்

மீனவர்களின் கோரிக்கையையடுத்து அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் திருமுல்லைவாசல் கிராமத்திற்கு நேரில் வந்து மணல் திட்டு ஏற்பட்டு உள்ள இடத்திற்கு படகு மூலம் சென்று ஆய்வு செய்தனர்.

அமைச்சர் மெய்யநாதனிடம் பேசினோம், "திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் மேம்படுத்துவதற்காக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் படகு அணையும் தளம், கடற் அரிப்பிற்கான தடுப்புச்சுவர் ஆகியன அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் கடல் ஆழப்படுத்துதல், தூர்வாரும் பணி 50,000 கன அடி மீட்டர் வரை நடைபெறவுள்ளது.

கள ஆய்வு பணியில் அதிகாரிகள், அமைச்சர்
கள ஆய்வு பணியில் அதிகாரிகள், அமைச்சர்

தற்போது மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து கள ஆய்வு செய்து அவர்களின் கோரிக்கையின் படி முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள மணல் திட்டை அகற்றி சிரமம் இல்லாமல் படகுகளை நிறுத்தவும், கடலுக்கு தொழிலுக்கு செல்லவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

இதனையடுத்து திருமுல்லைவாசல் கடற்கரை கிராம மீனவர்கள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com