குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மரியோ ஜெசின்தாஸ் என்ற மீனவரை இந்தோனேசியா கடற்படையினர் பிடித்து வைத்து அடித்து படுகொலை செய்த சம்பவத்தில், நீதிவிசாரணை கோரி, அமைச்சர் மனோ தங்கராஜை மீனவர்கள் முற்றுகையிட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி, குமரி மாவட்டத்தில் "குப்பையில்லா குமரி வனமே எங்கள் வளமே" என்ற முழக்கத்துடன் "மக்கள் இயக்கமாய் மாறுவோம்" என்ற கோஷத்துடன் மக்கள் மத்தியில் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கடல் அரிப்பில் இருந்து மீனவ கிராமங்களை பாதுகாக்கும் நோக்குடனும், சுற்றுசூழலை பேணும் விதமாகவும் குமரி கடற்கரை கிராமங்களான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 68 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை பகுதிகளில் முதற்கட்டமாக 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனை, அரசமரம், புங்கம் உள்ளிட்ட மரங்களை நடும் புது முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் போது, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மரியோ ஜெசின்தாஸ் என்ற மீனவரை இந்தோனேசியா கடற்படையினர் பிடித்து வைத்து அடித்து படுகொலை செய்தனர்.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த மீனவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு நீதிவிசாரணை வேண்டிய என்று இறந்த மீனவரின் குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இறந்த மீனவரின் புகைப்படம் அடங்கிய பதாகைகளுடன் பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்தினர் அமைச்சர் மனோ தங்கராஜை முற்றுகையிட்டு நீதிகேட்டு முற்றுகையிட்டனர்.
போராட்டகாரர்களை சமாதானம் செய்த அமைச்சர் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதனையடுத்து போராட்டக்காரர்கள் முற்றுகையை கைவிட்டனர்.